இன்று உலகத் தாய்மொழி நாள்!
உலகத் தாய்மொழி நாள் 2000ஆம் ஆண்டு முதல் பிப்ரவரி 21 நாளன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
அமைதியை நிலைநாட்டுவதற்காகவும், பன்மொழிப் பயன்பாட்டை முன்னேற்றுவதற்காகவும், பன்முகப் பண்பாடுகளைப் போற்றுவதற்காகவும், உலகில் உள்ள அனைத்துத் தாய்மொழிகளைப் பாதுகாப்பதற்காகவும், இந்த நாள் கொண்டாடப்படுகின்றது.
பங்காளதேசத்தின் தேசிய மொழியாக வங்க மொழியே அமையவேண்டும் என்பதற்காக, 1952ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ‘வங்க மொழி இயக்கத்தை’ அங்கீகரிப்பதற்காகவே பிப்பிரவரி 21ஆம் நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது.
இந்த நாளில் தான் வங்க மொழி இயக்கத்தைச் சார்ந்த மாணவர்களும் அரசியல் ஆர்வலர்களும், தங்கள் மொழிக்காகச் சட்டத்தை மீறி போராட்டத்தில் இறங்கினர். காவல் துறையின் நடவடிக்கையால், சில மாணவர்களும் கொல்லப்பட்டனர். போராட்டங்கள் நாடு முழுவதும் பரவியது. சில ஆண்டுகள் கடந்தும் போராட்டங்கள் ஓயவில்லை. இறுதியில், 1956 ஆண்டு நாட்டின் மொழியாக வங்க மொழி அறிவிக்கப்பட்டது.
மொழிக்காகப் போராடிய இந்த இயக்கத்தை நினைவில் கொண்டு, உலகில் உள்ள அனைத்து மக்களின் மொழி உரிமையைப் பாதுகாக்கவே 1999 ஆம் ஆண்டில், 21 பிப்பிரவரியைப் பன்னாட்டுத் தாய்மொழி நாள் என ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் (யுனெசுக்கோ) அறிவித்தது.
வாழையடி வாழையாக வளர்ந்த பண்பாட்டைக் காப்பாற்றவும், தொடர்ந்து வளர்த்தெடுக்கவும், மிகவும் ஆற்றல் வாய்ந்தக் கருவிகளாக அமைந்தவை, உலக மக்களின் தாய் மொழிகள். நமது தாய்மொழியைப் போற்றுவதும், மற்றவர்களின் மொழிகளுக்கு இடங்கொடுப்பதும் உலக அமைதிக்கும், ஒற்றுமைக்கும், புரிந்துணர்வுக்கும் வழிவகுக்கும்.
இவ்வாண்டுக்கான கருப்பொருள்
இவ்வாண்டுக்கான கருப்பொருள்: பன்மொழிக் கல்வி: கல்வி உருமாற்றத்திற்கு இன்றியமையாத ஒன்று (Multilingual education – a necessity to transform education).
பன்மொழிப் புலமை ஒருவரின் திறமைக்கு ஊக்கம் சேர்க்கிறது என்பது வல்லுனர்களால் தெளிவாக விளக்கப்பட்ட ஒன்று. பல மொழிகளைக் கற்போம்! தாய்மொழியைப் போற்றுவோம்!
அனைவருக்கும் தாய்மொழி நாள் வாழ்த்துகள்!
நன்றி:
Sumber : sellinam.com
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.